Wednesday, March 20, 2013

பரதேசியின் பறை ஓங்கி ஒலிக்கட்டும்!!!


.
வணக்கம் நண்பர்களே,

இயக்குனர் பாலாவின் திரைப்படங்கள் அனைத்தையும் பார்த்து இருந்தாலும் பரதேசி படம்  ஒரு பாதிப்பு ஏற்படுத்தியது என்பதால் அந்த பாதிப்பை பதிவாக வெளிப்படுத்திவிட வேண்டும் என்ற முடிவே இப்பதிவு.

வரலாறு,அறிவியல் என்பவை மனிதனை கடந்தகால நிகழ்வுகளில் இருந்து கற்று,நிகழ்காலத்தில் வாழ்ந்து,எதிர்காலத்தினை கணிக்கும் விடயங்கள் என்பதால் இரண்டிலும் ஆர்வம் உண்டு.

நமது வரலாறை ஆவணப் படுத்தும், பாமர மக்களிடையே கொண்டு செல்லும் எந்த முயற்சியும் பாராட்டத் தக்கதே. அந்த வகையில் இயக்குனர் பாலாவுக்கு முதல் பாராட்டினைத் தெரிவிக்கிறோம்.

ஒரு மக்கள் குழுவின் ,மூன்று கால கட்ட வரலாற்றினை படம் சொல்கிறது.

1. தென் தமிழக சாலூர் கிராமத்தில் வாழும் ஒரு ஒடுக்கப்பட்ட சாதிக்குழுவின் எதார்த்த வாழ்வு. வறுமை இருந்தாலும், உழைப்பு சுரண்டப் பட்டாலும், சுதந்திரமாக ,மகிழ்ச்சியாக வாழ்ந்த சூழல் முதலில் காட்டப் படுகிறது.
ஒரே சாதிக்குள்ளும் பொருளாதாரம் சார்ந்து ஏற்றத் தாழ்வு இருப்பதும் நாயகனுக்கு, நாயகியை திருமணம் செய்ய மறுக்கும் தாயின் மனநிலையாக காட்டப் படுகிறது.

அவர்களின் வாழ்வாதாரம் சார் சூழல் சரியாக காட்டப் படவில்லை என்பதே நம் கருத்து. விவசாய பண்ணைகளில்,செங்கல் சூளைகளில் கூலிகளாக இருப்பவர்களின் வாழ்வில் படத்தில் காட்டப்பட்ட சுதந்திரம் கூட‌ கிடைக்குமா என்பது கேள்விக்குறியதுதான்.இந்த சூழலில் கூட குறைந்த கூலி,பாலியல் சுரண்டல் முதலானவை நடந்தது,இன்றும் கூட பல கொத்தடிமை மீட்பு போன்ற செய்திகளில் படிக்கிறோம்.கூலி  உயர்வு கேட்ட மக்களை குடிசையோடு கொளுத்திய சம்பவங்களும் வரலாறு.



2.இச்சூழலில் இருந்து பொருளாதார முன்னெற்றம் வேண்டி கங்காணி என்னும் ஏமாற்றுப் பேர்வழியின் பேச்சை நம்பி, கூட்டமாக சில மாதம் நடந்தே மூணார் தேயிலைத் தோட்டத்திற்கு வந்து சேர்கின்றனர். வரும் வழியில் சிலர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் போதே ,அவர்களை அப்படியே விட்டுவிட்டு செல்வது வரும் துன்பத்திற்கு இலேசான முன்னோட்டமாக எடுக்கலாம்.

தேயிலை என்பது சீனாவில் நீண்ட நாட்களாக பயன்படுத்தப் பட்டு வந்தது, வெள்ளையருக்கு இது பற்றி 17 ஆம் நூற்றாண்டில் தெரிய வந்ததும், இதனை உலக முழுதும் அறிமுகப் படுத்தி,ஒரு சந்தையை உருவாக்கி வெற்றி கண்டனர். சீனா தெயிலைக்கு போட்டியாக மலை சார் நிலங்களில் காட்டை அழித்து ,தேயிலைத் தோட்டம் உருவாக்கினர்.எப்போதும் சீன,மேலை நாடுகள் வியாபார,ஆதிக்க போட்டி பலரின் துன்பங்களுக்கு குறிப்பாக தமிழர்களின் துயரத்திற்கு காரணம் ஆவதை என்ன சொல்வது?.அந்த தேயிலைத் தோட்டங்களுள் ஒன்றுதான் படத்தில் காட்டப் படுகிறது.

இலாபம் அதிகரிக்க வெண்டும் எனில், வேலை செய்யும் தொழிலாளிகளின் உழைப்பை அதிகம் சுரண்டினால் மட்டுமே சாத்தியம் என்பதால் , அவர்களின் உழைப்பிற்கு மிக குறைந்த கூலி,அதுவும் வருட முடிவில் மட்டுமே கிடைக்கும் என சொல்லப் படுகிறது.

உணவு,வாடகை,மருத்துவம்,வட்டி என மிச்சம் மீதி எதுவும் மிஞ்சாது ,கடனில் எப்போதும் இருக்கும் படி சூழலில் தொடர்ந்து உழைத்தாக வேண்டும்.

உழைப்பில் உடல் குலைந்து ,ஆரோக்கியம் தொலைத்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறார்.

இப்படியே புதிதாக கூலிகள் வருவதும்,அங்கேயே பலர் உழைத்து சருகாகி மடிவதும்,தொடர்கதையாக நாடு சுதந்திரம் வரை நடந்தது.

இன்றும் கூட இந்திய,இலங்கை மற்றும் கென்யாவில் தொழிலாளர்களின் பொருளாதார நிலை மோசம் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. டீ'ன் விலையில் 1% மட்டுமே தொழிலாளர்களுக்கு இன்றும் செல்வதாக சொல்வது உரைக்கும் உண்மை.


சுதந்திரத்தின் பின் சில தொழிலாளர் உரிமைகள் பற்றி சட்டம் கொண்டு வரப் பட்டாலும், அவை நடைமுறைக்கு வராது. இச்சட்டங்கள் கங்காணி போல் தொழிலாளர் நல அலுவலர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படும்.
Plantations Labour Act, 1951


3. மதமாற்ற பிரச்சினை: இப்போது புலம் பெயர்ந்த,ஒடுக்கப்பட்ட சாதிக் குழுவுக்கு, உழைப்புச் சுரண்டல் அல்லாமல் மதமாற்ற‌ப் பிரச்சாரத்தையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் எழுகிறது.

இச்சூழலை படத்தில் , மத மாற்றப் பிரச்சாரகன் கங்காணியை விட மோசமானவன் என்னும் ஒரு வாக்கியத்தில் மட்டும் காட்டி நம் கணிப்புக்கு கதையின் போக்கை விட்டுவிட்டு படத்தை முடித்து விடுகிறார்கள்.
***

முதலாளிகளின் மதமும், பிரசாரகரின் மதமும் ஒன்றாக இருப்பதாலும், இந்த மத மாற்றம் தொழிலாளிகளை மதரீதியாக பிரிக்கும் என்பதால் இது அனுமதிக்கப்டுவது மட்டும் அல்ல ஊக்குவிக்கப் படும். முதலில் மதம் மாறும் சிலருக்கு சில பொருளாதார வசதிகள் கிட்டும். இது கூட ஒருவகை விளம்பரமே. தொடர்ந்து மாறுபவர்களுகு பெயர் மட்டுமே மாறும், வேறு எதுவும் மாறாது.பெயர் மாறினாலும், ஒடுக்கப்படும் மக்கள் இடையே சில தலைமுறைகளில் பிரிவு நிரந்தரம் ஆகும்.

தமிழர்களில் மதம் மாறிய பெரும்பான்மையோரின் நிலை, இந்து சமூக ஒடுக்கப்பட்ட சாதியினரின் நிலைக்கு ஒப்பாக இருப்பது இதன் நிரூபணம் ஆகும். 

வாழ்வாதாரம் சார் போராட்டங்கள் திரிந்து மதம்,இனம் சார் பிரிவினைகளாக பரிணமித்தால் ஆயுதம் கொடுத்து போராக மாற்ற‌  வல்லூறுகள் பல உண்டு. முரண்பாட்டின் காரணி உணவு கொடுக்க மறுப்பவன், ஊரை அழிக்கும் ஆயுதம் கொடுப்பது ஏன் என போரிடும் இரு சகோதரக் குழுக்களும் உண்ர மாட்டார்கள்.நம் சாதி, மதம் சேர்ந்த்வன் ஆண்டாலும் நமக்கு எதுவும் செய்ய மாட்டான் என மக்கள் உணராத வரை இந்த ஏமாற்று வேலை தொடரும்.

ஆனாலும் மதம்,சாதி சார்ந்த பிரச்சினைகளில் , தனது ஒடுக்குதலையும் மறந்து ,கூட ஒடுக்கப்படும் சொந்த சகோதரர்கள் என்பதையும் மறந்து, தன் மத எஜமானுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதை பல சமயங்களில் பதிவுலகில் கண்டு இருக்கிறோம்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இதுபோல் ஆசை வார்த்தை காட்டி கூட்டி செல்லும்  கங்காணிகளும் உண்டு. கந்து வட்டிக்கு கடன் வாங்கி சென்றோர், பல வருடம் உழைத்து வீணாகப் போக வேண்டியதுதான். அங்கு சென்றால் அப்படித்தான்,போகாமல் ஊரில் இருக்க வேண்டியதுதானே என மதம் சார்ந்து சுரண்டலுக்கும் ஆதரவாக கூக்குரல் இடும் சகோக்களும் உண்டு.அந்த இடம் பூலோக சொர்க்கம், அங்கே தேவதூதர்கள் போல் எஜமான்கள் என்னும் பரப்புரைகள் பலவும்  படித்து இருக்கிறோம் அல்லவா!!!


சுரண்டும் எஜமானர்கள், கங்காணியாக மத்திய தர வர்க்கம், சுரண்டப்படும் விவசாயி,கூலித் தொழிலாளர்கள் என வைத்து பார்தாலும் சரிதான்.

முடிவாக சொல்வது மத்திய தர வர்க்க [பதிவுலக] கங்காணிகளே சுரண்டும் எஜமானை விட, சுரண்டப்படும் சகோதரனுக்கு குரல் கொடுங்கள் என்பதே!!!!!!!!!!!

கானா பாலாவின் இப்பாடல்(ம்) நம்க்கு மிகவும் பிடித்து விட்டது. இப்போது முணுமுணுக்கும் பாடல் இதுதான்.

கேளுங்கள்!!!!!!!!



இப்பாடலை மதமாற்றப் பிரச்சாரத்தை கிண்டல் அடிக்கும் விதமாக எடுத்து இருந்தாலும், அப்பாட்டில் வரும் பாமர மக்களின் இசை பறை ஒலி இவற்றுக்கு தீர்வு வராதா?? என நம்மைப் பார்த்து கேட்பதாகவே உணரலாம்.மனிதர்களின் பிரச்சினைகளை,மனிதர்களாகிய  நாம்தான் சுமுகமாக தீர்க்க வேண்டும்.

ஆகவே பரதேசியின் பறை ஒலி ஓங்கி ஒலிக்கட்டும்!!!!

நன்றி!!! 

6 comments:

  1. இந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லை, ஆனால் பரதேசி என்ற தலைப்பும், கதைக் கருவும், கண்காணிகளின் அராஜகங்களும், வெள்ளை முதலாளிகளின் சுரண்டல்களும் முன்னோட்டத்தில் பார்க்கும் போது, எனக்கு சட்டென நியாபகம் வந்தது, 150 ஆண்டுகளுக்கு முன்னால் வறுமையில் வாடிய தலித்களை ஏமாற்றி பொடி நடையாகவே இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு கொண்டு போய், போற வழியில் லட்சக்கணக்கானோர் இறந்து மடிய, மிச்சம் மீதி இருப்பவர்களை ஒரு கொத்தடிமைகளாக மாற்றி இன்றளவும் சீரழிந்து கிடக்கும் மலையகத் தமிழர்கள் தான். அதுவும் மலையகத்தில் கண்காணிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் யாழ்பாணத் தமிழர்கள், அவர்களின் கொடுமைகளை, சாதி வெறிகளை பல்வேறு மலையக இலக்கியங்கள் சித்தரித்துள்ளன. அத்தோடு இலங்கை விடுதலை அடைந்த போது, அவர்கள் குறித்து சிறிதும் கவலைப்படாது நடுத்தெருவில் விட்டுச் சென்ற பிரித்தானியாரும், அந்நிய செலவாணியை அள்ளித் தர கடுமையாக உழைத்த அவர்களில் பலரை யாழ்ப்பாணத் தமிழர், சிங்களவர் சகிதமாக இந்தியாவுக்கு விரட்டி, மிச்சம் மீதி இருந்தவருக்கு இழுத்து இழுத்து குடியுரிமைக் கொடுக்காமல் மறுத்து, சொல்ல முடியாத துயரங்களை சந்தித்த ஒரு மாபெரும் கூட்டமே என் கண்கள் முன்னால் விரிந்தன. இவர்களை மதம் மாற்றத் துடித்தவர்கள், அடிமையாக்கியவர்கள் என என்னக் கொடுமைகள்,.

    பரதேசி ( அயலவராக , வடக்கத்தியராக, தோட்டக் காட்டு சக்கிலியராக, ஈனத் தமிழராக ) துன்பட்ட கதைகளின் பிம்பம் தான் இக்கதையோ என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது,. படம் பார்த்த பின் மீதியை கூறுகின்றேன்.

    ReplyDelete
  2. //தமிழர்களில் மதம் மாறிய பெரும்பான்மையோரின் நிலை, இந்து சமூக ஒடுக்கப்பட்ட சாதியினரின் நிலைக்கு ஒப்பாக இருப்பது இதன் நிரூபணம் ஆகும். // இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை ஒரளவுக்கு உண்மையாக இருக்கலாம். ஆனால் கிறிஸ்தவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் கிறிஸ்தவத்திற்கு மாறியவர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதே உண்மை. இதற்கு தமிழகத்தில் தென் மாவட்டங்களே சாட்சி.

    ReplyDelete
  3. சிறந்த படம். எனது பார்வையில் பரதேசி.....

    http://suvanappiriyan.blogspot.com/2013/03/blog-post_19.html

    ReplyDelete
  4. //தமிழர்களில் மதம் மாறிய பெரும்பான்மையோரின் நிலை, இந்து சமூக ஒடுக்கப்பட்ட சாதியினரின் நிலைக்கு ஒப்பாக இருப்பது இதன் நிரூபணம் ஆகும்.
    வாழ்வாதாரம் சார் போராட்டங்கள் திரிந்து மதம்,இனம் சார் பிரிவினைகளாக பரிணமித்தால் ஆயுதம் கொடுத்து போராக மாற்ற‌ வல்லூறுகள் பல உண்டு. முரண்பாட்டின் காரணி உணவு கொடுக்க மறுப்பவன், ஊரை அழிக்கும் ஆயுதம் கொடுப்பது ஏன் என போரிடும் இரு சகோதரக் குழுக்களும் உண்ர மாட்டார்கள்.நம் சாதி, மதம் சேர்ந்த்வன் ஆண்டாலும் நமக்கு எதுவும் செய்ய மாட்டான் என மக்கள் உணராத வரை இந்த ஏமாற்று வேலை தொடரும்//
    அருமையான உண்மைகள் சகோ.
    சகோ கிருத்திகன் யோகராஜின் பதிவில் பரதேசி பட விமர்சனம் படித்தேன்.யாரும் பரதேசிக்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை வரவில்லை.இப்போ உங்க பதிவை படிச்சபின் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கு.
    //இன்றும் கூட இந்திய இலங்கை மற்றும் கென்யாவில் தொழிலாளர்களின் பொருளாதார நிலை மோசம் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.//
    கென்யா,இலங்கை தான் ஆபிரிக்க பாசிச நாடுகளாயிற்றே. இந்தியாவில் எப்படி இந்த நிலைமை. தமிழக மாணவங்களுக்கு எப்படி இதுவெல்லாம் தெரியாம போச்சு.

    ReplyDelete
  5. சமூகச்சார்புள்ள நல்ல ஒரு திறனாய்வு. படத்திலிருந்து சமூகத்தையும், சமூகப்பார்வையைப் படத்தின் மீதும் வைத்து எழுதியிருக்கும் திறனாய்விற்கு என் நன்றியும் பாராட்டும்.

    ReplyDelete
  6. உங்கள் பதிவில் பட விமர்சனமா என்று ஆச்சரியத்துடன் வந்தேன்.

    தருமி அவர்களின் விமர்சனத்தை அப்படியே வழிமொழிகின்றேன்.

    ReplyDelete